Thursday, 15 May 2014

குடும்ப கட்டுப்பாடு

கருவில் குழந்தை உருவாகுவதை தடுப்பதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் காலத்தில் அஸ்ல் என்ற ஒரு முறை இருந்தது. இல்லற வாழ்வின் போது ஆண் உச்சகட்ட நிலையை அடையும் போது தன் விந்தை மனைவியின் கற்ப அறைக்குள் செலுத்தாமல் வெளியே விட்டுவிடுவான். இம்முறைக்குத் தான் அஸ்ல் என்று சொல்லப்படுகிறது. இவ்வாறு செய்வதை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அனுமதித்துள்ளார்கள் என்பதற்கு சான்றுகள் உள்ளது.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களது காலத்தில் குர்ஆன் அருளப்பட்டுக்கொண்டிருந்த நிலையில் நாங்கள் ‘அஸ்ல்‘ (புணர்ச்சி இடை முறிப்பு) செய்துகொண்டிருந்தோம். (அறிவிப்பவர் : ஜாபிர் ரளியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி 5209)
ஒரு மனிதர் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்து (அல்லாஹ்வின் தூதரே) எனக்கு ஒரு அடிமைப் பெண் இருக்கிறாள் அவள் எங்களுக்கு பணிவிடை செய்கிறாள். நான் அவளிடத்தில் உடலுறவு கொள்கிறேன். அவள் கற்பமாகிவிடுவாளோ என்று நான் அஞ்சுகிறேன் என்று கேட்டார். அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நீ விரும்பினால் அஸ்ல் செய்துகொள். அவளுக்கென்று விதிக்கப்பட்டது அவளை விரைவில் வந்தடையும் என்று கூறினார்கள். (அறிவிப்பவர் : ஜாபிர் ரளியல்லாஹு அன்ஹு, நூல் : முஸ்லிம் 2606)
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் காலத்தில் நாங்கள் அஸ்ல் (புணர்ச்சி இடைமறிப்பு) செய்துகொண்டிருந்தோம். இச்செய்தி நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை எட்டியது. ஆனால் அவர்கள் எங்களைத் தடுக்கவில்லை. (அறிவிப்பவர் : ஜாபிர் ரளியல்லாஹு அன்ஹு, நூல் : முஸ்லிம் 2610)
மேலுள்ள செய்திகளை கவனிக்கும் போது அஸ்ல் செய்வது தடைசெய்யப்பட்ட ஒன்றல்ல என்பதை விளங்கிக்கொள்ளலாம். என்றாலும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இவ்வாறு செய்வது சிறந்தது என்றோ நன்மையான காரியம் என்றோ கூறவில்லை. மாறாக இதை தவிர்த்துக்கொள்வது நல்லது என்ற அளவில் தான் கூறியுள்ளார்கள். பின்வரும் செய்திகளை கவனிக்கும் போது இந்த முடிவுக்கு வரலாம்.
நாங்கள் அஸ்ல் செய்ய விரும்பினோம். எனவே அது பற்றி அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் கேட்டோம். அதற்கு அவர்கள் அதை நீங்கள் செய்யாமல் இருந்தால் தவறேதுமில்லையே. மறுமை நாள் வரை உருவாக வேண்டிய எந்த உயிரும் கட்டாயம் உருவாகியேத் தீரும் என்று பதிலளித்தார்கள். (அறிவிப்பவர் : அபூ சயீத் அல்குத்ரீ ரளியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி 2542).
தற்காலிகமாக குழந்தை உருவாவதை தடுத்துக்கொள்வதற்கான வழி தான் அஸ்ல் என்பது. அவ்வாறு செய்வதை சிறந்தது கிடையாது என்று நபியவர்கள் கருதியிருக்கும் போது நிரந்தரமாக குழந்தை உருவாகாதவாறு குடும்பக்கட்டுப்பாடு செய்வது முற்றிலும் தவறாகும். தற்காலிக கட்டுப்பாடான அஸ்ல் செய்வதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அனுமதியளித்துள்ளதால் ஆணுறை, காப்பர்டி போன்ற நவீன சாதனங்களை பயன்படுத்தி தற்காலிகமாக குடும்பகட்டுப்பாடு செய்வதற்கு மாத்திரம் அனுமதியுள்ளது.
குழந்தை பாக்கியம் என்பது அல்லாஹ் கொடுத்த ஒரு மாபெரும் பாக்கியம். போதுமான அளவு குழந்தைகளை பெற்றெடுத்தப் பின் நிரந்தர குடும்பக்கட்டுப்பாட்டை செய்யலாம் என்று பலர் நினைக்கிறார்கள். நிரந்தர குடும்பக்கட்டுப்பாட்டை செய்த பின் பெற்றெடுத்தக் குழந்தைகள் விபத்தில் சிக்கி இறந்துவிட்டால் மீண்டும் இவர்கள் குழந்தை பாக்கியத்தை எப்படி பெறமுடியும்?. இதை சிந்தித்துப் பார்த்தாலே யாரும் நிரந்தர குடும்பக்கட்டுப்பாட்டை செய்யமாட்டார்கள்.
காப்பர் டி - பெண்கள் அணிவது மருத்துவர்களிடம் அனுமதி பெற்று செய்ய வேண்டும். ஏனென்றால் நிறைய பெண்களுக்கு அது உடல் ரீதியான பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. ஆணுறை பொறுத்தவரை பிரச்னை இல்லை. 

அவரவர் உடல் நிலைக்கு ஏற்றவாறு செய்து கொள்ள வேண்டும் 

No comments:

Post a Comment